பேராவூரணியில் மதுக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய 100 பேர் கைது.

Unknown
0
பேராவூரணி சேது சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.இதன் அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மாணவியர் விடுதி, தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் மருத்துவமனை, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்ட இந்த மதுக் கடையை சில மாதங்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் திறந்தனர்.

மாணவிகள், பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை அகற்ற வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பல கட்ட சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த மாதம்(ஜனவரி) 20-ந் தேதி அந்த கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் ஒப்புக்கொண்டபடி இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை.

இதனால் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பிப் 3 ந்-தேதி(நேற்று) மதுக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நீலகண்டன் தலைமையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, தலைவர் கலைச்செல்வி, பொருளாளர் அமுதா, ஒன்றிய செயலாளர் இந்துமதி, இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சித்திரவேலு, காசிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், நிர்வாகிகள் கருப்பையன், குமாரசாமி, வேலுச்சாமி, ரெங்கசாமி, ம.தி.மு.க .பாலசுப்பிரமணியன், குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மோட்ச குணவழகன், அரவிந்தகுமார், மைதீன், நாம் தமிழர் கட்சி திலீபன், தே.மு.தி.க. சுரேஷ், திராவிடர் விடுதலைக்கழகம் திருவேங்கடம், கலைச்செல்வன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300 பெண்கள் உள்பட 500 பேர் மதுக்கடைக்கு பூட்டுபோடுவதற்காக புறப்பட்டனர்.

அப்போது வழியில் இரும்பு தடுப்பு அமைத்து போலீசார், போராட்டம் நடத்தியவர்களை முன்னேறிச்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டக்குழுவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருஞானம், உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி, கோட்ட கலால் அலுவலர் கோபி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேல், துணை சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், செங்கமலக்கண்ணன், அசோக்குமார் படேல், தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போராட்டக்குழுவினர், ஏற்கனவே இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், உதவி கலெக்டர் உறுதிமொழியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் கடையை மூடுவதை தவிர வேறு எதனையும் ஏற்க முடியாது என உறுதியாக கூறினர். இதையடுத்து 25 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top