பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பாதை பணிக்கு நிலம் கையகப்படுத்தப்படும்.
பிப்ரவரி 06, 2018
0
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு தொடர்பான தென்னக ரயில்வே துறையுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை ஒரத்தநாடு வழியாக இயக்கப்படுவது தொடர்பாக நில எடுப்பு செய்யப்படவுள்ள கிராமங்கள் பரப்பளவு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் வட்டத்தில் புளியந்தோப்பு, குளிச்சப்பட்டு, சூரக்கோட்டை, காட்டூர், மடிகை ஆகிய கிராமங்களில் 31.23.90 ஹெக்டேர் நில எடுப்பும் ஒரத்தநாடு வட்டத்தில் மூர்த்தியம்பாள்புரம், புதூர், தெலுங்கன்குடிகாடு, கோவிலூர், புலவன்காடு, சோழகன்குடிகாடு, ஆவிடநல்லவிஜயபுரம் ஆகிய கிராமங்களில் 42.80.50 ஹெக்டேர் பரப்பளவும், பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம், மகாராஜசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 21.48.40 ஹெக்டேர் பரப்பளவில் தென்னக ரயில்வேத் துறைக்கு அகல ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கு கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, ஓலையக்குன்னம், அணைக்காடு, வெண்டாக்கோட்டை, நாட்டுச்சாலை, வேப்பங்குளம், தளிக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உட்கடை, மோகூர், மதுக்கூர், முசிறி, நாடியாம்பாள்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
தென்னக ரயில்வேத் துறையினர் ஒவ்வொரு வாரமும் இப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தென்னக ரயில்வேத் துறை பொறியாளர் எஸ்.சேகர், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க