தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி வட்டாரத்தில் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தென்னையை தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் தெரிவித்திருப்பதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளைஈக்கள் தென்னை மட்டை இலைகளின் கீழ்பரப்பில் சுருள் சுருளாக வெண்மை நிறத்தில் முட்டைகளை ஈன்று வைத்திருக்கும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும்.
இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவகை தேன் போன்ற இனிப்பு திரவத்தால் இலைகளின் மேற்பரப்பு முழுவதும் கரும்பாசனம் (சூட்டிமோல்டு) பெருமளவில் வளர்ந்து பயிரின் இலை பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை முற்றிலும் தடைப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றிவிடும். இப்பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு மஞ்சள் நிறமடைந்து நாளடைவில் சருகுபோல் காய்ந்துவிடும். இப்பூச்சிகள் தென்னை மட்டுமின்றி மா, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, காட்டாமணக்கு, சீத்தா பழம், எலுமிச்சை, செம்பருத்தியையும் தாக்குகிறது.
இதை கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பூச்சி தாக்குதலுக்குண்டான தோப்புகளில் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் அழிந்துவிடும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 - 10 என்ற அளவில் தோப்புகளில் வைத்து பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இப்பூச்சிகளின் தாய் பூச்சிகளின் நடமாட்டம் மலை 6 முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருக்கும் என்பதால் ஏக்கருக்கு 2 விளக்குப்பொறிகளை அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
இலைகளின்கீழ் காணப்படும் முட்டைகள் இளம்பருவ மற்றும் முதிர்ந்த பூச்சிகளை ராக்கர் ஸ்பிரேயர் மற்றும் பவர் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும் பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் மைதா மாவு பசையை தண்ணீரில் கலந்து அவற்றை இலைகளின் மேற்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இப்பூச்சிகளுக்கு இயற்கையாகவே எதிரி பூச்சிகளாக தோப்புகளில் காணப்படும் பச்சைகண்ணாடி இறக்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணி, குளவியை பாதுகாக்க வேண்டும்.
இப்பூச்சியை கட்டுப்படுத்த மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் திருச்சி ஆய்வகத்திலிருந்து பச்சைகண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகள், இளம்பருவ பூச்சிகள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டைகளை தென்னை மட்டைகளில் உள்ள ஓலைகளில் ஆங்காங்கே பின்னடித்து வைக்க வேண்டும் அல்லது கட்டி தொங்கவிட வேண்டும். பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய இரை விழுங்கியான (பிரிடேட்டர்ஸ்) என்கார்சியா எனும் கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணி குளவிகளை தோப்புகளில் விட வேண்டும்.
தேவைப்பட்டால் மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தாவரபூச்சி விரட்டியான 5 சத வேப்பங்கொட்டை கரைசல், 10 சத வேப்ப இலைக்கரைசல், 0.5 சத வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்புக்கரைசல் மூலிகை பூச்சி விரட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
பிப்ரவரி 20, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க