காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதை பணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு பேராவூரணி நீலகண்டபுரத்தில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
முதல் கட்டமாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் நிறைவுற்று விரைவில் வெள்ளோட்டம் விடப்பட உள்ளது. இந்த நிலையில் ரெயில்வே துறை சிக்கன நடவடிக்கை காரணமாக பேராவூரணி முடப்புளிக்காடு செல்லும் ரெயில்வே கேட் அருகேயுள்ள நீலகண்டபுரம் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதால் கேட்டிற்கு அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக கழனிவாசல், கொரட்டூர், பெருமகளூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள்.
எனவே ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடாமல் ரெயில் பாதை அமைக்க வேண்டுமென ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் ஆர்ப் பாட்டமும், காத்திருப்பு போராட்டமும் நடத்தினர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் வந்தனர். திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்ரெட்டி தலைமையில் ரெயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகளை திருச்சி சிவா எம்.பி. தலைமையில் கோவிந்தராசு எம்.எல்.ஏ., பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக் குமார், ரெயில்வே கேட் போராட்டக்குழு தலைவர் வக்கீல் மோகன் உள்ளிட்டோர் ரெயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்களின் முக்கியமான கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரெயில்வே கேட் உள்ள இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பேராவூரணி நீலகண்டபுரத்தில் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட எதிர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம்.
மார்ச் 02, 2018
0