பேராவூரணி அருகே வீடுகளை காலி செய்ய கூறியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Unknown
0
பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சவுரிராஜன்- செண்பகத்தம்மாள் தம்பதிக்கு சொந்தமான 170 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இவர்களுடைய குடும்பத்துக்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சவுரிராஜன்-செண்பகத்தம்மாள் தம்பதிக்கு ராமானுஜன், சீனிவாசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சவுரிராஜன், செண்பகத்தம்மாள் ஆகியோர் இறந்து விட்டனர். செண்பகத்தம்மாளும், அவருடைய இளைய மகன் சீனிவாசனும் நிலத்தை பல்வேறு நபர்களிடம் விற்று விட்டனர். அதேபோல ராமானுஜனும் நிலத்தை விற்பனை செய்தார். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களில் பலர் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராமானுஜன், சீனிவாசன் இடையே சொத்துப்பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு சீனிவாசனுக்கு 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உத்தரவிட்டது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக சீனிவாசன் தனது வக்கீல் கோவிந்தராசு மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் பழனிவேலு, ஜெயகுமார் ஆகியோருடன் நாட்டாணிக்கோட்டை கிராமத்துக்கு வந்தார்.

அப்போது அங்கு வசித்து வரும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தாங்கள் விலைக்கு வாங்கி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கோர்ட்டு ஊழியர்களிடம் கிராம மக்கள், தாங்கள் நிலத்தை விலைக்கு வாங்கியது தொடர்பான பத்திரத்தை காட்டி முறையிட்டனர். இதனால் ஊழியர்கள், நிலம் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனிடையே கிராம மக்கள் சார்பில் நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சீனிவாசன் மீது பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை காலிசெய்யும்படி தொந்தரவு செய்து வரும் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மனு ரசீது கொடுத்தனர். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இதை கண்டித்து நேற்றுமுன்தினம் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கிராம தலைவர்கள் வீராசாமி, சுந்தர்ராசு, நீலகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் சாலை மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். மறியல் காரணமாக பேராவூரணி-அறந்தாங்கி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top