பேராவூரணி அருகே பூக்கொல்லை யிலிருந்து, வாத்தலைக்காடு வழியாக குருவிக்கரம்பை செல்லும் தார்ச்சாலை சேதமடைந்தது, கப்பி சாலையாக மாறிவிட்டது. போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக்கொல்லை யிலிருந்து, வாத்தலைக்காடு வழியாக குருவிக்கரம்பை சென்று சேரும் 5 கிலோ மீட்டர் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே,எவ்வித பராமரிப்பும் இன்றி மிகவும் சேதமடைந்து, குண்டுங்குழியுமாகவும், மண்சாலையாகவும் மாறிவிட்டது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களுக்கு பின்னால் எவரும் வாகனத்தில் பயணம் செய்ய முடியாத அவல நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வாத்தலைக்காடு கோவிலுக்கு செல்லும் பெண்கள் குண்டும் குழியாக உள்ள ரோட்டில் பயணிக்கும் போது தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இவ்வழியாக தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள், அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன. சேதம டைந்த சாலையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலனை கருத்திற் கொண்டு இந்த சாலையை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேது பாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை.
ஏப்ரல் 02, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க