பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுடன் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கஜனாதேவி தலைமையில் நடந்தது. பேராவூரணி எம்எல்ஏவும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கோவிந்தராசு முன்னிலை வகித்தார். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டை சேர்ந்த சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாணவர்கள் அக்கறை, கவனமுடனும் படிக்க வேண்டும்.
படித்தவற்றை நன்கு மனதில் பதிய வைக்க வேண்டும். திறமை, வெற்றிக்கு ஒரு போதும் பயம் தடையாக இருக்கக்கூடாது. நம்முடைய வெற்றி நமக்கு மட்டுமல்ல, நமது குடும்பம், நம்மை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. உங்களுக்கான இலக்கை நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நீலகண்டன், துணைத்தலைவர் பால்பக்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார் உடற்கல்வி ஆசிரியர் ரங்கேஸ்வரி நன்றி கூறினார்.