பேராவூரணியில், பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வாரச்சந்தை பிரதி வாரம் ஞாயிறுதோறும் இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமையான இந்த வாரச்சந்தை நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் அருகில் விரிவான இடத்தில் இருந்து வந்தது. கடந்த 1985 ஆம் ஆண்டு அப்போதைய பேரூராட்சி பெருந்தலைவராக இருந்த சொ.சுப்பிரமணியன் முயற்சியால், சந்தை இருந்த இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப் பட்டதையடுத்து, அதன் ஒரு பகுதியில் சந்தை இயங்கி வருகிறது.
இந்நிலையில், மக்கள் தொகை அதிகரிப்பால் வாரச்சந்தை தற்போது இட நெருக்கடியோடு இயங்கி வருகிறது. சந்தையில் காய்கறிகள், மீன், இறைச்சி, கருவாடு, மசாலாப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், பழக்கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. காலப்போக்கில் தேவைக்கேற்ப கடைகளும் அதிகரித்துவிட்டன. இப்பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுடைய தேவைகளுக்காக இங்குள்ள வாரச்சந்தையையே நாடி வருகின்றனர்.
இடநெருக்கடி காரணமாக பேருந்து நிலைய வளாகத்தில் காலியாக இருந்த இடத்திலும் தற்போது பழக்கடைகள், காய்கறிக் கடைகள் வாரச்சந்தை நாளான ஞாயிறன்று இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற விவசாயிகள், வயது முதிர்ந்த பெண்கள் சந்தைக்கு வெளியே சுற்றுச்சுவர் ஓரமாக எவருக்கும் இடையூறின்றி சிறுசிறு கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாரச்சந்தையில் கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள், தங்களது கடைகளில் வைத்து வியாபாரம் செய்யாமல், கடைகளை காலியாகப் போட்டுவிட்டு, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கடைகளை பரப்பி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் நடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சந்தை ஏலதாரர்கள், காவல்துறை ஒத்துழைப்போடு நடைபாதையை ஒழுங்குபடுத்தி, வியாபாரிகள் கடைகளைப் பயன்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்.
சிபிஎம் கோரிக்கை
இதுகுறித்து சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், "பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் வாரச்சந்தை இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. நடக்கக்கூட இடம் இல்லாமல், நடைபாதையில் வியாபாரம் செய்வது பொதுமக்களுக்கு சிரமத்தை உண்டாக்குகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொதுமக்கள், அவசரமாக வெளியேற முடியாத நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் இதனை கண்காணிக்க வேண்டும். வாரச்சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்த கழிவறை, குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
நன்றி: தீக்கதிர்