பேராவூரணி அருகே பஞ்சுக் கழிவில் ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் பஞ்சு கழிவுத் தூள், தென்னை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமானது.
பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் சிவன்கோயில் அருகே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தேங்காய் மட்டையில் இருந்து, கயறு தயாரிக்கும் பஞ்சு கழிவுகளில் இருந்து கேக் தயாரிப்பதற்காக பஞ்சு கழிவுகளை ஒரு ஏக்கர் இடத்தில் காயவைத்து சேமித்து வைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென எதிர்பாராதவிதமாக கழிவு பஞ்சில் தீப்பற்றியது. இப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதில் தீ மளமளவென பரவியதில் அருகில் உள்ள சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிலும் தீ பரவியது. இதில் தென்னந்தோப்பில் இருந்த 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகியது. தகவல் அறிந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நன்றி:தினமணி