பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலரும் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவருமான வி.சௌந்தர்ராஜனின் சேவையை பாராட்டி தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சிறந்த மருத்துவருக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு 50 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுக்குரிய பணத்தின் மூலம் பசுமாடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை வாங்கி, ஆட்கள் மூலம் பராமரித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கர்ப்பிணிகளுக்கு பால், முட்டை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். தனது சேவைக்கு கிடைத்த விருதுப் பணத்தை, பயனுள்ள வகையில் கர்ப்பிணிகளுக்கு உதவ முன்வந்துள்ள டாக்டர் வி.சௌந்தர்ராஜனின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டி உள்ளனர். ஏற்கெனவே நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட உதவியால் சுகாதார நிலைய வளாகத்தில் பசு மாடு ஒன்றை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலை சுகாதார நிலைய கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.