பேராவூரணி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு வழங்க அரசு டாக்டர் காய்கறித் தோட்டம் அமைத்து உள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. டாக்டர் சவுந்தரராஜன், மீண்டும் சுகாதார நிலைய டாக்டராகவும், பேராவூரணி வட்டார மருந்துவ அலுவலராகவும் பணியமர்த்தப்பட்டார். இவர், மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணிகளுக்காக, தனியாக ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டத்தை அமைத்து இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி கத்திரிக்காய், வெண்டை, புடலை, தக்காளி, துவரை என முக்கிய சத்துகள் நிறைந்த காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளனர்.
மேலும் மூலிகை செடிகளையும் தோட்டத்தில் பயிரிட்டு வருகிறார்.
மேலும் மருத்துவமனை வளாகத்தி லேயே கன்றுடன் கூடிய பசு மாட்டினை வளர்த்து, அதில் கிடைக்கும் பாலை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறார். நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட நிதியை கொண்டு ஜெனரேட்டர், தொலைக்காட்சி, சிறுவர் விளையாட்டு பூங்கா என தனித்தன்மையோடு சுகாதார நிலைய மேம்பாட்டிற்கென பாடுபட்டு வருகிறார். இவரது செயல்பாட்டினை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டி உள்ளனர். சிறந்த மருத்துவருக்கான விருது மற்றும் பாராட்டு பத்திரத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கி பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.