பேராவூரணி டாக்டர் தேவதாஸ் ரோடு அருகே குமாரவேல் என்பவர் குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார். மதியம் பள்ளி முடிந்து பள்ளி வேனில் குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்திரா நகர் பூனைகுத்திப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது போது, வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் பேராவூரணி வீரமணி நகரைச் சேர்ந்த ராகவன்(வயது 29), உதவியாளர் நாடாகாடு பொற்செல்வி (வயது 42), இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. எல்கேஜி மாணவர்கள் ஆவணம் சிவராமன்(வயது 3), செங்கமங்கலம் ஸ்ரீ நிகாஷ் (வயது 3) ஆகியோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம், கோவி.இளங்கோ, பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார், வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பரமானந்தம், உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: அதிரை நியூஸ்.