பேராவூரணி உள்ளிட்ட பகுதி மக்கள் விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த 3 வருடங்களாக காவிரி நீர் முறையாக இப்பகுதிக்கு வந்து சேராததால் முழுமையாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வருமானம் இன்றி சிரமப்பட்டனர்
கடந்த ஆண்டு காவிரி நீர் தாமதமாக வந்தாலும் ஓரளவுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் இந்த காவிரி நீரை தேக்கி வைக்க முடிந்தாலும் பல ஏரிகளில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட ஏரி-குளங்களிலும் தண்ணீர் வறண்டு போய் விட்டது. இதனால் ஆடு, மாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளதால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்து விட்டது. இனியும் தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிராம்பட்டினம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.