திருவாரூர் - பட்டுக்கோட்டை - பேராவூரணி - காரைக்குடி வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ந் தேதி முதல் தொடங்க உள்ளது.
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே துறைக்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து, வரும் ஜூன் 1ந் தேதி முதல் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு காலை 11.30 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து காலை 11.32 மணிக்கு புறப்பட்டு, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பிற்பகல் 14.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும் எனவும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 17.18 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து மாலை 17.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும் என்றும், இந்த பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ந் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: அதிரை நியூஸ்