பேராவூரணி இரயில் நிலையத்திற்கு ( திருவாரூரில் இருந்து) மதியம் 12.18 மணிக்கும் மற்றும் எதிர் மார்க்கத்தில் ( காரைக்குடியில் இருந்து) மாலை 4.30 மணிக்கும் வந்தடையும்.
காரைக்குடி ரயில் பாதையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரயில் சேவை நாளை முதல் துவங்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின. இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இது மட்டுமின்றி திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களும் அனுப்பப்பட்டன. இதனையடுத்து இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி இந்த ரயில் சேவை துவங்கப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உட்பட பலரும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்த நிலையில் நாளை மறுதினம் (ஜூன் 1ம் தேதி) முதல் இந்த ரயில் பாதையில் ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்படும் ரயில் தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடைகிறது. பின்னர் மீண்டும் 2.30 மணி அளவில் அங்கிருந்து புறப்படும் இந்த ரயிலானது அதே வழித்தடத்தில் இரவு 8.30 மணியளவில் மீண்டும் திருவாரூர் வந்து சேருகிறது.
மணிக்கு 20 கிமீ வேகம்
திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 110 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு இந்த பாசஞ்சர் ரயிலில் 6 மணி நேரம் வரையில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் பயணிகள் உள்ளனர். அதன்படி மணிக்கு 20 கிலோமீட்டருக்கு குறைவாகவே இந்த ரயில் சேவையானது நடைபெற உள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர் கூறுகையில், இந்த 110 கிலோ மீட்டர் தூரத்தில் மொத்தம் 72 ரயில்வே கேட்டுகள் இருந்து வரும் நிலையில் இந்த ரயில்வே கேட்டுகள் அனைத்திலும் ஏற்கனவே பணியாற்றி வந்த கேட் கீப்பர்கள் பலரும் பல்வேறு ஊர்களுக்கு மாறுதலாகி சென்றுவிட்டனர். மேலும் பலர் இறந்து விட்ட நிலையில் பலர் பணி ஓய்வும் பெற்று விட்டனர். இதன் காரணமாக இந்த 72 கேடுகளுக்கும் ரயில்வே கேட் கீப்பர் என்பது இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த ரயிலிலானது மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு இயக்கப்பட உள்ளது. அதன்படி இதே ரயிலில் இன்ஜினுக்கு அடுத்த படியாக இருக்கும் முதல் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும், கடைசிப் பெட்டியில் ஒரு கேட்கீப்பரும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி வழியில் ரயில்வே கேட் முன்னதாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு முதல் பெட்டியில் உள்ள கேட் கீப்பர் கேட்டை மூடி விட்டு அதே பெட்டியில் ஏறிவிடுவார். பின்னர் அந்த கேட்டை ரயில் கடந்த பின்னர் நிறுத்தபட்டு கடைசி பெட்டியில் இருக்கும் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறிக்கொள்வார். இதேபோல் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நிறுத்தப்பட்டு கேட் மூடப்படுவதும் பின்னர் திறக்கப்படுவதும் காரணமாக 110 கிலோ மீட்டர் தூரத்தினை 6 மணி நேரம் வரையில் கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக பணியாளர்ளை நியமனம் செய்து குறைந்த நேரத்தில் ரயில் சேவையினை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
3 மாத காலத்திற்கு மட்டும் ரயில் இயக்கப்படும்
வரும் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முடிய 3 மாத காலத்திற்கு மட்டும் இந்த டெமு ரயில் இயக்கப்படும். 3 மாத காலத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொண்டு அதன் பின்னர் ரயில் சேவையினை தொடர்வதா, இல்லையா என்று ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று 110 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் கடக்க வேண்டிய நிலையில் பயணிகள் உள்ளபோது இந்த ரயில் சேவையினை பயணிகள் எவ்வாறு வரவேற்பார்கள், எப்படி பயணம் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதால் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது போல 3 மாத காலத்தில் எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதால் இந்த ரயில் சேவை மீண்டும் தொடர்ந்து நடைபெறுவதற்கான கேள்விக்குறியும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.