பேராவூரணி பெரியகுளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் 200-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும், 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும் கடும் வறட்சி காரணமாக வறண்டு கிடக்கின்றன. பேராவூரணி- புதுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பெரியகுளம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பழையநகரம், பொன்காடு மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கல்லணை கால்வாயில் போதிய அளவு பாசனத்திற்கு தண்ணீர் வராததாலும், பருவ மழை இல்லாததாலும், கடல் போல் நிரம்பி காட்சியளித்த பெரியகுளம் இப்போது கடும் வறட்சி காரணமாக வறண்ட பூமியாக காணப்படுகிறது. அரசு, கடந்த ஆண்டு உரிய கட்டணம் செலுத்தி விவசாய நிலங்களுக்கும், மண்பாண்ட தொழில் நடத்தவும் அனுமதி பெற்று மண் எடுத்துச் செல்லலாம் என அறிவித்தது. இதன் மூலம் குளத்தை ஆழ, அகலப்படுத்தி தூர் வாரப்படுவதன் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம் என நினைத்து மண் எடுத்துச் செல்ல அனுமதித்தது. ஆனால் மண் முறையாக வெட்டாமலும், அங்கே இங்கேயுமாக வெட்டி எடுத்துச் சென்றதால் முறையாக தூர் வாரப்படாததால் அரசின் நோக்கம் தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறியதாவது, "கடந்தாண்டு கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நான்கு முறை அணை நிரம்பியும், கடைமடைப் பகுதிக்கு முறைவைத்து நீர் வழங்கப்பட்டதாலும் பேராவூரணி சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட குளங்களில் முறையாக தூர்வாரப்படாததால் அதிகளவு நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோடைக் காலத்தில் பாசனத்திற்கு நீர் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் காவிரி நீரை வீணாக கடலில் கலக்காதவாறு பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்கள், ஏரிகள், பாசன கால்வாய்கள், ஆனந்தவல்லி வாய்க்கால், பூனைகுத்தி ஆறு அனைத்தையும் தூர்வாரி ஆழப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
நன்றி:தீக்கதிர்