பேராவூரணி பின்னவாசல் அகத்தீஸ்வரர் கோயில்.

IT TEAM
0










     
பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில் , கிட்டத்தட்ட 700லிருந்து- 1000 வருடம் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரர்  சிவன் கோயில்.

பேராவூரணி வட்டாரத்தில் உள்ள தொன்மையான வரலாற்றைக் கொண்ட கோயில்களில் ஒன்றாகும். பின்னவாசலின் பழைய பெயர் புன்னைவாயில் என்பதாகும். இங்கு காணப்படும் சிவன்கோயில் கட்டப்பட்ட ஆண்டு சரியாகத் தெரியவில்லை ஆனால் இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பாண்டியர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு இருக்க வேண்டும். திருப்பணி செய்யப்பட்டதற்கு சான்றாக கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இக்கோயிலில் இப்போது கருவறை, கருவறை முன் மண்டபம், மகாமண்டபம் மற்றும் அம்மன் சன்னதி ஆகியவையே உள்ளது ஏனைய பகுதிகள் சிதிலமடைந்து விட்டன. மூலவர், முருகன், பைரவர் ஆகிய சிற்பங்களே காணப்படுகின்றன. மகாமண்டபத் தூண்களிலேயே சோழ, பாண்டிய கட்டடக்கலைகள் கலந்து காணப்படுகின்றன மொத்தமாக 6 தூண்கள் உள்ளன இதில் 4 தூண்கள் சோழர் காலத்தவை மீதமுள்ள 2 தூண்கள் பாண்டியர் காலத்தவையாக காணப்படுகிறது.

இக்கோயிலில் மொத்தம் 3 கல்வெட்டுகள் காணப்படுகிறது இவை பாண்டியர் காலத்தவை ஒரு கல்வெட்டு பெரிதாகவும் ஏனைய இரண்டு சிறியவையாக உள்ளது. பெரிதாக காணப்படும் கல்வெட்டில் திருக்கோயில் எழுப்பவும், அகரம் ( அக்ரஹாரம்) அமைக்கவும் கழுமலமுடையான் சிங்கபெருமாளான வேணாவுடையார்க்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தியினை சொல்கிறது நிலத்தின் நான்கு எல்லைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் பொ.ஆ. 1259 ஆகும்  இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பெயர் இடம் பெறுகிறது சுந்தரபாண்டிய வளநாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இத் திருக்கற்றளியின் திருப்பணியின் போது ஆதனூரைச் சேர்ந்த ஒருவர் தன்மம்  கொடுத்த செய்தியும் இடம்பெறுகிறது. மற்றொரு கல்வெட்டில் திருநிலைக்கால் தன்மம் வழங்கிய செய்தியும் இடம்பெறுகிறது.

நன்றி: கு. இந்திரஜித்
     

                                                         

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top