1996 ஆம் ஆண்டு பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்த மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பறையில் சந்தித்துக் கொண்டனர்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் 96 என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்பட வெளியீட்டுக்கு பின் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996இல் படித்த மாணவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினர்.
இக்குழுவில் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேரத் தொடங்கினர்.
வெளிநாடுகளில் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து பணி புரியும் பலரையும் இந்தக் குழு நெருக்கத்தில் கொண்டுவந்தது.
திசையெட்டும் சிதறிய கூட்டம் இந்த குழுவால் ஒன்றிணைந்தது.
இணையவழி சேர்ந்த மாணவர்கள் நேரில் சந்திக்க நாள் குறித்தனர்.
ஜனவரி 26 குடியரசு நாள் தாங்கள் படித்த பள்ளியில் கொடி ஏற்றிவிட்டு சந்தித்து மகிழலாம் என திட்டமிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துவிட்டனர்.
சிலர் மார்க்கண்டேயன்களாக
சிலர் வயதான தோற்றத்தில்
சிலர் தலையில் வழுக்கையோடு
அடையாளம் கண்டு விட்டபிறகு கட்டி அணைத்து கண் கலங்கினர்.
மச்சான் பங்காளி என உறவுகள் சொல்லி மகிழ்ந்தனர்.
தான் படித்த வகுப்பறையிலேயே அமர்ந்து கதை அளந்தனர்.
தங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களை அழைத்து மீண்டும் ஒரு முறை பாடம் எடுக்க வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் திரு மெய்ஞ்ஞான மூர்த்தி, திரு இரா சந்திரசேகரன், திரு.வி.வைரவசுந்தரம், திரு இரா சின்னத்துரை, திரு தங்கராசு, திருமதி இந்திராதேவி, காவிரி தனிப் பயிற்சி மைய ஆசிரியர் திரு. கேஎஸ் கௌதமன் ஆகியோர் இந்த மாணவர் சந்திப்பில் கலந்துகொண்டு, தங்களிடம் படித்த மாணவர்களின் உயர்வான நிலை கண்டு நெகிழ்ந்தனர்.
நிகழ்வில் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் கண்டிப்பு,
அரவணைப்பு,
வழிகாட்டுதல் போன்றவை குறித்தும் பள்ளிநாட்களில் தாங்கள் செய்த சேட்டைகள் குறித்தும் பேசியது வகுப்பறையை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்த இந்தப் பள்ளி தற்பொழுது சில நூறு மாணவர்கள் படிக்கும் பள்ளியாக மாறியது கண்டு வருந்தினர்.
தோட்டம் சூழ பசுமையாக இருந்த பள்ளி, பாழடைந்த கட்டிடங்கள் சூழ இருப்பது கண்டு கண்ணீர் விட்டனர்.
ஆலயம் போல் இருந்த பள்ளி அழுக்கடைந்து சிதிலமடைந்து கிடப்பதை எண்ணி வருந்தினர்.
பள்ளியின் தேவை குறித்தும் பள்ளி வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து பட்டியலிட குழு அமைத்தனர்.
பாழடைந்த சுமார் 8 கட்டிடங்களை இடித்துத் தர அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானம் இயற்றினர்.
சோலை ஆக்குவோம் என்று சூளுரைத்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கட்டமைப்பையும் மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க இன்னும் இன்னும் முன்னாள் மாணவர் கூட்டம் தேவை.
1996 மட்டுமல்ல பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து இங்கு படித்த மாணவர்கள் ஒன்று சேர வேண்டும்.
அரசுப்பள்ளிகளை மூடிவிட துடிக்கும் ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளிகளுக்கு எதிராக செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அரசு, கல்வி வழங்குவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தயாராகிவருகிறது.
இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் கூடுகை ஒவ்வொரு பள்ளியிலும் தொடரவேண்டும்