தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், எழுது பொருள்கள், புத்தகப்பை வழங்கும் நிகழ்வு.
பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கள்ளங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், எழுது பொருட்கள், கையேடு, கைப்பை ஆகியவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்கரன். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தில் இணைந்து செயலாற்றி வருகிறார்.
இதனால் தனியார் பள்ளியில் பயின்ற தனது மகளை தனது சொந்த ஊர் பள்ளியான கள்ளங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து படிக்க வைக்க விரும்பினார்.
மாணவர் சேர்க்கைக்காக தோழர் சதீஸ்கரனுடன் தமிழ்வழிக் கல்வி இயக்கம் பொறுப்பாளர்கள் மெய்ச்சுடர் நாவெங்கடேசன், த.பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், தமிழ்வழிக் கல்வி இயக்க வளைகுடா பொறுப்பாளர் செங்கை நிலவன் ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களும் மாணவர்களும் உரையாடினர்.
மாணவர் எண்ணிக்கை ஏழிலிருந்து படிப்படியாக இருபத்தி ஒன்றாக உயர்ந்துள்ள இப்பள்ளிக்கு
சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் எட்டு மாணவர்களை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா தனது சொந்த செலவில் தானி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வருகிறார்.
பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள சிறுவர்களை பள்ளியில் உதவி ஆசிரியர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று அழைத்து வருகிறார்.
இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட தமிழ் வழிக்கல்வி இயக்கப் பொறுப்பாளர்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக கூறினர்.
இந்நிலையில் இன்று தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகம், வாய்ப்பாடு, கையேடு எழுது பொருட்கள் அடங்கிய புத்தகப்பையை மாணவர்களிடம் வழங்கினர்.
பள்ளி ஆசிரியர் தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நன்றி: மெய்ச்சுடர்