தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் பேராவூரணியிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் 1300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புராதனவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற தலம் என்பது கூடுதல் சிறப்பு.
கட்டிட அமைப்பு: இக்கோயிலில் பாண்டியர் கட்டிட பாணி காணப்படுகிறது, மேலும் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பை கொண்டுள்ளது, தேவகோஷ்டங்களில் சிற்பமும் காணப்படுகிறது, மேலும் இக்கோயிலில் திருச்சுற்று மாளிகை காணப்படுவது கூடுதல் சிறப்பு ஆனால் திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதி காணப்படவில்லை அது சிதைந்து இருக்கலாம் முன்மண்டபத்தில் இரு சிற்பங்கள் அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறது.
கல்வெட்டு செய்திகள்: இக்கோயிலில் பாண்டியர், சோழர், நாயக்கர் கால கல்வெட்டுகள் காணப்படுகிறது
கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு ஆகும் இதன் காலம் கி.பி.878 ஆகும் இக்கல்வெட்டு வரிகள் மிகவும் சேதமடைந்தது எனினும் மன்னன் பெயரும் ஊரின் பெயரும் தெளிவாக உள்ளது, இதில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என காணப்படுகிறது.
அடுத்ததாக முதலாம் பராந்தகச் சோழன் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது, இதன் காலம் கி.பி. 936 ஆகும். இதுவும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது இது இறைவனை திருச்சிற்றேமத்து மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. பராந்தக சோழனின் மற்றொரு கல்வெட்டு நந்தா விளக்கு எறிக்க நக்கநாச்சி என்பவர் தன் மகளின் சார்பாக 95 ஆடுகள் தானம் வழங்கிய செய்தியினை கூறுகிறது.
முதலாம் இராஜராஜனின் கல்வெட்டும் இக்கோயிலி்ல் காணப்படுகிறது இதன் காலம் கி.பி. 995, இக்கல்வெட்டு இறைவனுக்கு திருவமுது படைக்க நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றிக் கூறுகிறது, மற்றொரு கல்வெட்டு வாழ்வூரைச் சேர்ந்த பூடி உத்தமன் இறைவனுக்கு திருவமுது படைக்க நிலம் கொடையளித்த செய்தி காணப்படுகிறது, குளக்குடி ஊரின் சார்பாக 12 1/2 களஞ்சு பொன் பெறப்பட்டு அந்த நிலத்திற்கு வரி நீக்கப்பட்டுள்ள செய்தி காணப்படுகிறது மேலும் இதில் திருச்சிற்றேமம் தேவதான-பிரம்மதேயம் என்றும் இராஜராஜ வளநாடு என்றும் புன்றில் கூற்றம் என்றும் அதன் நாடு மற்றும் கூற்றம் பற்றிய செய்தி காணப்படுகிறது.
முதலாம் இராஜேந்திரன் காலத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது இதன் காலம் கி.பி. 1016 ஆகும், இதில் கோயிலில் அந்தி விளக்கு எறிக்க ஏற்பாடு செய்த செய்தி காணப்படுகிறது.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு காணப்படுகிறது இதன் காலம் கி.பி. 1216 இதில் புன்றில் கூற்றத்தில் உள்ள வாட்டாருன்டில் உள்ள இறைவன் பழையவன்னப்பெருமாள் க்கு தேவதானமாக 100 பணத்திற்கு சாமந்த மழவராயன் என்பவன் நிலம் விற்ற செய்தி காணப்படுகிறது.
மூன்றாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது இதன் காலம் கி.பி. 1249, திருச்சிற்றேமம் குளத்துக்கு நீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க நிலம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு இறைவிக்கு திருவமுது படைக்க நிலம் வழங்கிய செய்தி பற்றி கூறுகிறது. இதில் நிலம் வழங்கிய நபர் மலை மண்டலத்து குலமுக்கிலைச் சேர்ந்த குதிரை வியாபாரி குலோத்துங்க சோழ செட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது இதன் காலம் கி.பி. 1253 ஆகும்.
மற்றுமொரு கல்வெட்டு நெடுவாசலை சேர்ந்த உடையான் அறங்கால்வன் ( அ) குதிரை ஆண்டான் என்பவன் நிலம் தானம் வழங்கிய செய்தி காணப்படுகிறது மேலும் இக்கோயிலில் சில பகுதிகளையும் கட்டிக்கொடுத்துள்ளான். மேலும் ஒரு தூண் கல்வெட்டில் அந்த தூண் தானம் வழங்கியவன் மிட்டான் இராமன் ( அ) மடையால்புரையூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விஜயநகர நாயக்கர் காலத்தைய கல்வெட்டுகளும் கிடைக்கின்றன.
பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ச்சிற்றேமம் உடைய என பாடியுள்ளார், இது இத்தலமான திருச்சிற்றம்பலத்தையே குறிக்கும் ஆனால் இப்பதிகத்திற்கு உடைய கோயில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள சித்தாமூரில் அமைந்துள்ள பொன்வைத்தநாதர் என்ற கருத்து நிலவுகிறது ஆனால் அக்கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் அவ்வூரின் பெயர் சிற்றாய்மூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்மூலம் அவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் இல்லை என்பது உறுதியாகிறது, மேலும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என குறிப்பிடப்பட்டுள்ளது இதன்மூலம் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் இக்கோயிலையே குறிக்கிறது எனவும் இத்தலம் பாடல் பெற்ற தலம் என்பதும் உறுதியாகிறது.
சிறப்புகள்: இத்தலத்தில் அருள்பாலிக்கும் பூ விழுங்கி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர், மேலும் இங்கு பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி வழிபாடு போன்றவைகள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
-- இந்திரஜித் ஜித்தா