ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தை பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கப்பட்டது. இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேளரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCT Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.