நஞ்சை தரிசில் பயறு விதைகள் விதைக்க விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. டெல்டா மாவட்டங்களில் நடப்பு ரபி பருவத்தில் இலக்கை மிஞ்சி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நெல் அறுவடைக்கு பின்னர் கோடை நெல் சாகுபடிக்கு செல்லாமல் அனைவரும் நஞ்சை தரிசில் உளுந்து, பச்சை பயறு, சோயா பீன்ஸ் போன்ற பயறு வகைகளை விதைப்பு செய்ய வேண்டும். நெல் சாகுபடிக்கு அதிக சாகுபடி செலவு, அதிக அளவு உரங்கள் இட வேண்டிய நிலை, ஒரே பயிரை தொடர்ந்து செய்வதால் மண்ணின் வளம் குன்றி போதல், அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலை, இயற்கை சீற்றங்களினால் மகசூல் இழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் நெல் சாகுபடியில் உள்ளது. இதனை தவிர்த்து குறைந்த நாட்களில் குறைந்த தண்ணிரை கொண்டு அதிக மகசூல் தரும், மண்ணின் வளம் காக்கும் பயறு வகைகளை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்திட அனைத்து கிராமங்களிலும் வேளாண் துறை அலுவலர்களை கொண்டு முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி பயறு வகைகளை சாகுபடி செய்யும் போது உற்பத்தி செய்யப்படும் பயறு வகைகளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்வது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே அனைத்து விவசாயிகளும் கோடை நெல் சாகுபடி செய்வதை தவிர்த்து நெல் தரிசில் பயறு வகை விதைகளை விதைத்திட முன்வர வேண்டும் என பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.