மருந்தீஸ்வரர் ஆலயம் - மருங்கப்பள்ளம்
பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை அடுத்த மருங்கப்பள்ளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீ அவ்ஷதபுரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) திருக்கோயில்.
மருங்கப்பள்ளம், பேராவூரணியிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பழமையான ஊர் வளமையான ஊரும்கூட, இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க மருந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று. மருந்தீஸ்வரர் ஆலயம் மருந்து தீர்த்தம் காணப்படுவதால் இவ்வூரின் பெயர் மருந்துபள்ளம் என்றும் அது மருவி மருங்கப்பள்ளம் ஆனது எனவும் கூறப்படுகிறது. தென்னை சாகுபடியில் தனி இடத்தைப் பெற்றுள்ளது மருங்கப்பள்ளம்.
கட்டிடக்கலை:
இக்கோயில் மராட்டியர் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் காணப்படுகிறது. இராஜகோபுரமும் உள்ளது, மேலும் இங்கு ஒரு சிற்பம் உள்ளது அது அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறது இது ஏதேனும் அரசனாகவோஅல்லது ஊர் தலைவராகவோ இருக்க வாய்ப்புள்ளது.
மராட்டியர் காலமா?
1814ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் வாட்டர்லூ போர்களத்தில் பிரெஞ்சு வீரன் நெப்போலியன் பொனபார்ட் க்கு எதிராக ஆங்கிலேயர் பெற்ற வெற்றியைக் கொண்டாட அதன் நினைவுச் சின்னமாக மனோரா என்ற கோட்டையை சேதுபாவாசத்திரத்திற்கு அருகில் உள்ள சரபேந்திரராஜபட்டினம் என்னும் ஊரில் கட்டினார் இதன் கட்டுமானத்தின் போது சரபோஜி மன்னருக்கு தீராத நோய் ஒன்று ஏற்பட்டதாகவும் அவர் மருங்கப்பள்ளம் வந்து மருந்தீஸ்வரரை வழிபட்டு மருந்து தீர்த்தத்தில் நீராடினர் எனவும் அதனால் அவரது நோய் குணமானதாகவும் அதன் பொருட்டு அவர் இக்கோயிலை எழுப்பினார் என கூறப்படுகிறது கட்டிடக்கலையிலும் மராட்டியர் கலைப்பாணியில் தான் காணப்படுகிறது. இதன்மூலம் தற்போது உள்ள கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்பது
உறுதியாகிறது. அப்படியானால் இக்கோயில் 1815 - 1816 ல் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனில் இதன் வரலாறு 200 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறலாம் எனில் இது 19 ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் உண்மையில் இக்கோயிலின் வரலாறு தொடங்கும் காலம் 13ம் நூற்றாண்டின் முற்பகுதி. ஆம் இங்கு கிடைக்கும் பாண்டியர் கல்வெட்டு மூலம் இச் செய்தியானது உறுதியாகிறது.
கல்வெட்டு செய்தி:
இங்கு இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன அவை இரண்டும் பாண்டியர் காலத்தவை, மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகள் இவையிரண்டும் இதன் காலம் கி.பி. 1222 கல்வெட்டுகள் சிதைந்துள்ளது எனினும் அரசன் பெயர், மாதம், நட்சத்திரம் போன்றவைகள் தெளிவாக தெரிகிறது மேலும் இதில் ஜெயசிங்க குலகாலவளநாடு என்பதும் தெளிவாக தெரிகிறது இதன் மூலம் இப்பகுதி எந்த வளநாட்டின் கீழ் வருகிறது என்பது தெளிவாகிறது.
சிறப்புகள்:
பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்கள் இங்கு வெகு விமர்சையாக சிறப்பாக காணப்படுகிறது மேலும் மருந்தீஸ்வரர், மருத்துவநாயகி, மருத்துவ விநாயகர், மருந்து தீர்த்தம், மருந்து பள்ளம் என அனைத்தும் இங்கு மருத்துவம் சார்ந்தே இருப்பது கூடுதல் சிறப்பு.
- இந்திரஜித் ஜித்தா