பேராவூரணிக்கு பெருமை சேர்த்த பத்திரிகையாளருக்கான பாராட்டு விழா
இதழியல் துறையில் 30 ஆண்டுகளாக தனது நேர்மையான பங்களிப்பை வழங்கி வரும் பத்திரிக்கையாளர், இதழியல் மற்றும் இலக்கியத்துறையில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டி அண்ணன் கா.கான்முகமது அவர்களுக்கான பாராட்டு விழா பெரும் கொண்டாட்டமாய் பேராவூரணியில் நிகழ்ந்தேறியது.
பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், வணிகர்கள், அரசியல் ஆளுமைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அண்ணனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்வில் வெ. நீலகண்டன் எழுத்திலும் இயக்கத்திலும் உருவான "கான் என்றொரு போதிமரம்" ஆவணப்படம் திரையிடப்பட்டது. கான் என்னும் தனி மனிதருக்கு ஏன் இந்த விழா நடத்தப்படுகிறது என்பதற்கான விளக்கமாக வெ.நீலகண்டனின் பின்னணி குரலில் எழுத்தாளுமைகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் நேர்காணலோடு உருவாக்கப்பட்ட இந்த காணொளி பார்வையாளர்களை கட்டிப்போட்டது. கவனத்தை ஈர்த்தது. இளம் எழுத்தாளர்களுக்கு எழுச்சியூட்டியது.
"கான் எனும் பண்பாளர்" என்ற தலைப்பிலான சிறப்பிதழை "வெற்றி முரசு" சிற்றிதழ் வெளியிடப்பட்டது. அண்ணனின் எழுத்து உருவாக்கிய சமூக தாக்கங்களை கூறும் பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகளையும், பேராவூரணியின் இலக்கிய மற்றும் எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று ஆவணமாகவும் , ஓவியர் அந்தோணியின் ஓவியம், செந்தில்குமாரின் அட்டைப் பக்க வடிவமைப்பு, க.நவீன்குமாரின் அழகிய இதழ் வடிவமைப்போடு விழாவில் அனைவர் கரங்களிலும் தவழ்ந்தது.
சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், வட்டாட்சியர் த.சுகுமார், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர்,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா சிங்காரம், வயி.திருஞானசம்பந்தம் இவர்களின் வருகையும் வாழ்த்தும் விழாவின் முக்கியத்துவத்தை பறைசாற்றியது.
தோழர் அரங்க குணசேகரன் போன்ற சமூகப் போராளிகளின் பங்கேற்பு விழா நாயகனின் சமூகச் செயல்பாடுகளுக்கு சாட்சி பகன்றது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி துணை ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ், தினகரன் ஆன்மீகம் பொறுப்பாசிரியர் கிருஷ்ணா, கலாட்டா டாட் காம் முதன்மை செய்தியாளர் அருள் வளன் அரசு ஆகியோரின் இதழியல் குறித்த உரை, ஊடகத்துறையின் சவாலை விரிவாக பேசியது. அண்ணன் கான் முகமது அவர்களின் உயரத்தை இன்னும் அதிகமாக்கியது.
விழாவுக்கு மைய புள்ளியாய் இருந்து ஒவ்வொரு நிகழ்வையும் அழகுற வடிவமைத்த ஆனந்த விகடன், துணை நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டனின் உரை கான் முகமது அவர்களின் நேர்மையான வாழ்வை விளக்கியது. அடுத்த தலைமுறை பத்திரிக்கையாளர்கள் கான் முகமதுவை பின்பற்ற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியது.
பேராசிரியர் முனைவர் பா.சண்முகப்பிரியாவின் விழா தொகுப்பு விழாவின் கருவை சிதைத்து விடாமல் அழகு தமிழில் அமைந்திருந்தது.
நிகழ்வில் இந்திய அஞ்சல் துறையின் கான் அண்ணன் உருவம் தாங்கிய அஞ்சல் வில்லை வெளியிடப்பட்டது.
ஆலமரத்து விழுதுகள் அமைப்பு சார்பில் அண்ணன் கான் முகமது அவர்களின் உருவம் தாங்கிய கைப்பை வெளியிடப்பட்டது. பச்சையும் வெள்ளையுமாய் இரு வண்ணத்தினாலான கைப்பைக்குள் கான் எனும் பண்பாளர் சிறப்பிதழ் வைத்து விழா பரிசாக வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி ஆலங்குடி வட்டங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் படை திரண்டு அண்ணன் கான் முகமதுவின் கரங்களில் விழா நினைவுப் பரிசை வழங்கினார்கள்.
அண்ணன் கான் அவர்களின் ஆசிரியர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஐயா இரா சந்திரசேகரன் அவர்கள் விழா நாயகனை ஆரத்தழுவி வாழ்த்தியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.
தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர் அந்தோணி வரைந்த அண்ணனின் படத்தை அண்ணனின் அம்மாவே அரங்கத்திற்கு வந்து அண்ணன் கான் கைகளில் வழங்கிய போது கண்கலங்கி போனார்.
பாலா குழுவினரின் இசை சங்கமம்,
உடுமலை செந்தில் நடனம்,
சமையல் கலைஞர் சரவணன் கைவண்ணத்தில் நவதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவைமிகு உணவு பார்வையாளர்களுக்கு விருந்தானது.
பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழு மிகச் சிறப்பாக செய்திருந்தது...
நிகழ்வில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் வாழ்த்துச் செய்தியுடன் அவர் வாழ்த்தி வழங்கிய சிவசிவ பொறிக்கப்பட்ட பொன்னாடை அண்ணன் கான் முகமதுவின் தோள்களை அலங்கரித்த போது அனைவரும் எழுந்து நின்று எழுப்பிய கரவொலி அரங்கத்தை தாண்டியும் அதிர்ந்தது. அதில் சமய நல்லிணக்கத்தின் மீது பேராவூரணி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, ஒளி கீற்றாய் ஒளிர்ந்தது.
நம்பிக்கையுடன்...
ஆசிரியர்
மெய்ச்சுடர்.
நன்றி: மெய்ச்சுடர்