மண்ணில் புதைந்த மனிதரை உயிரோடு மீட்ட மீட்புப்படை வீரர்களுக்கு வாழ்த்து
------------------------------------
பேராவூரணி அருகே சின்னமனை கிராமத்தில் கழிவுநீர் வடிகாலுக்காய் தொழிலாளர்கள் குழி வெட்டிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சித்திரவேலு என்பவர், வெட்டிக் கொண்டிருந்த குழிக்குள் மண் சரிந்து புதைந்து கொண்டிருந்தார்.
மேலே நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் செய்வதறியாமல் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
மின்னல் வேகத்தில் அந்தப் பகுதிக்குச் சென்ற ராமச்சந்திரன் தலைமையிலான ரஜினி, சுப்பையன், நீலகண்டன், மகேந்திரன் உள்ளிட்ட மீட்பு படை வீரர்கள் கழுத்து வரை மண்ணுக்குள் புதைந்து போன சித்திரவேலு என்ற மனிதரை உயிரோடு மீட்டனர்.
மண் சரிந்து கொண்டிருந்த குழிக்குள் மாட்டிக் கொண்ட மனிதரை பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு படை மிக லாவகமாக மீட்ட செயல் இப்பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றது.
உயிரின் உன்னதம் அறிந்து உடனடியாக செயல்பட்ட மீட்பு படையினரை பாராட்ட எண்ணினார் பேராவூரணி மருத்துவர் துரை நீலகண்டன்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற மருத்துவர் நீலகண்டன் மீட்பு படை வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் பேசிய மருத்துவர்,
"மருத்துவ பணிக்கு இணையான சிறப்பு கொண்டது மீட்புப் பணி. உயிருக்கு போராடும் மனிதர்களை உடனடியாக உரிய நேரத்தில் சென்று காப்பதும் கடவுளுக்கு இணையானதுதான்.
உயிரை பணயம் வைத்து இன்னொரு உயிரை காக்கும் உன்னதமான பணி மீட்பு பணி. இந்தப் பணியை செய்பவர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதில்லை. மீட்புப் பணி வீரர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டும்" என்றார்.
நிகழ்வில் தீர்க்கதரி பத்திரிக்கை நிருபர் சா. ஜகுபர் அலி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது போன்ற பாராட்டுக்களால் இன்னும் ஊக்கம் பெறுவதாக மீட்பு படை வீரர்கள் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
புகழ் பட வாழும் உங்களின் புனித பயணம் தொடரட்டும்.
நற்செயல்களைப் பாராட்டும் நற்பண்பும் படரட்டும்.
நன்றி: மெய்ச்சுடர்