பள்ளிக்கூடத்தை பாதுகாக்க
களத்தில் பொன்னாங்கண்ணிக்காடு நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்
-----------------------
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி க்கு இடம் வாங்கிட கொடை கொடுத்தது நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்ஸ்.
பேராவூரணி பெரியகுளம் தூர்வார கைஃபா அமைப்பு களம் இறங்கும்போது முதன்முதலாய் தோள் கொடுத்து துணை நின்றது நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்ஸ்.
செயல்... செயல்... செயல்... ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் அமைப்பு. பொன்னாங்கண்ணிக்காடு புதிய தலைமுறை பிள்ளைகள் எல்லாம் நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்பில் இணைந்து கொள்வதை பெருமையாக கருதுகின்றனர் அப்பகுதி பெற்றோர்கள். தலைமுறை தாண்டி தகுதியானவர்கள் இணைந்து இந்த அமைப்பை கட்டி எழுப்பி வருகிறார்கள்.
ஓர் ஊருக்குள் இளவட்ட பிள்ளைகள் இணைந்து சுற்றினால் என்ன செய்வார்கள் என்ற இலக்கணம் ஒன்றை வைத்திருக்கிறது இந்த சமூகம். அந்த இலக்கணத்தை மாற்றி இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த இளைஞர் நற்பணி மன்றம் துணையாக நிற்கிறது.
ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் தலைமைத்துவம் பெற்று திகழ்கிறார்கள். ஊர் விழாக்களை நடத்த ஒன்று கூடுகிறார்கள். உறவோடு சேர்ந்து நிற்கிறார்கள். பண்பாட்டை பாதுகாக்க பொங்கல் விழாவை பெருமையோடு நடத்துகிறார்கள்.
இப்போது பள்ளிக்கு இடம் வாங்க களத்தில் நிற்கிறார்கள். தங்களது முதற்கட்ட பங்களிப்பாக ரூபாய் 10 ஆயிரத்தை பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா கணேஷ்குமார் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.
இவர்களோடு இணைந்து
சரிதா மகாராஜா ரூபாய் 5 ஆயிரம்,
ஜி பிரகதீஷ் ரூபாய் 5 ஆயிரம்
சிவ. சிற்றரசன் ரூபாய் ஆயிரத்தி ஒன்று
பள்ளிக்காக வழங்கி மகிழ்ந்தனர்.
ஊர் நலனில் அக்கறையோடு செயல்படும் நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்ஸ் நண்பர்களிடம் பேசும் பொழுது "இன்னும் அதிகமாய் மக்களிடம் பெற்றுத் தருகிறோம். இது எங்கள் ஊர் பள்ளி! எங்களின் பெருமை! அடுத்த தலைமுறைக்கு இந்தப் பள்ளியை பாதுகாத்து வழங்க வேண்டியது எங்களின் கடமை" என்றனர்.
பள்ளிக்கூட வரலாற்றில் உங்களின் பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பதிந்திருக்கும். வாழ்த்துக்கள் நண்பர்களே!
நன்றி : மெய்ச்சுடர்.