ரெட்டவயல் கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக ஒளிராமல் உள்ளது. அதனை உடனடியாக ஒளிர வைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக இந்த மின்விளக்கு ஒளிர்ந்து, அப்பகுதியில் பயன் அளித்து வந்தது.
தற்போது நீண்ட காலமாக மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளது. மேலும், அதில் இருந்த மின்விளக்குகள் சில காணாமல் போய் விட்டது. இதனால் அந்த கடைவீதி பகுதி இருள் அடைந்து காணப்படுகிறது. ரெட்டவயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய மையமான ரெட்டவயல் கடைவீதி இருளடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, உயர்கோபுர மின்விளக்கை சீரமைத்து மின்விளக்குகள் பொருத்தி ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வீரக்குடி ராஜா சம்பந்தப்பட்ட துறையினரை கேட்டுக் கொண்டுள்ளார்.