தஞ்சாவூர், அக்.31 -
வகுப்பறை கட்டடம் கேட்டு, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 65க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே ஐந்து வகுப்பறை கொண்ட கான்கிரீட் கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்து அடிக்கடி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
அதன் பிறகு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தகர கொட்டகையில், ஐந்து வகுப்புகளும் இயங்கி வருகிறது. இதனால் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும் போது மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்களும், பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தகரக் கொட்டகையில், பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால், மழைநீர் வகுப்புகளுக்குள் புகுந்ததால், மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தும், மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிள்ளைகளை அருகில் உள்ள கோவிலில் தங்க வைத்தனர். குழந்தைகள் சீருடையுடன் கோவிலிலேயே தங்கி உள்ளனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்