தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை காலை தொடங்கியது.
நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், கல்விப்புரவலர்கள் சுப.சேகர், அமைப்பு செயலாளர் சி.மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, கலாவதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.முருகேசன், அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் டி.கண்ணப்பன், எம்.கருணாநிதி, ஆர்.பழனிவேலு, பா.நிர்மலா,
இரா.வீரம்மாள், இரா.கண்ணன், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலைத்திருவிழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இதில், கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைத் திருவிழாவில், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த 28 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,500 க்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்த உள்ளனர்.