பேராவூரணி தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் "நூலகம் ஓர் ஆலயம்" நூலக வார விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவினையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களை கொண்டு தஞ்சை மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நல் நூலகர் விருது பெற்ற நூலகர் வேங்கடரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூல்கள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
அவர் தமது உரையில், "நூலகம் ஒர் ஆலயம், நூல்களே தெய்வம். நல்ல நூல்கள் நம்மை வழி நடத்தும், நூல்கள் மூலம் பல்வேறு நாடுகளைக் குறித்தும் உலகில் வழங்கி வரும் பல்வேறு பண்பாடுகளையும் அறிந்து கொள்ள முடியும். நூலகங்களில் தலைகுனிந்து படிப்பவர்களே உலகில் தலை சிறந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள்" என்றார்.
நிகழ்வில் பெரியார் அம்பேத்கர் நூலக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஆயர் த. ஜேம்ஸ், ஆசிரியர் சிவக்குமார், மருத்துவர் அருண்சுதேஷ், கவிஞர் தா. கலைச்செல்வன், ஆசிரியர்கள் கிருத்திகா, ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.