தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கடற்கரையில், நீர்நிலைகளை சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படையினர் சனிக்கிழமையன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாசிலாமணி, சேதுபாவாசத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படை அலுவலர் என்.சத்தியநாதன், காரைக்குடி 9 ஆவது பட்டாலியன் ஹவில்தார் மகேஷ் ஆகியோர் தலைமையில், தேசிய மாணவர் படை மாணவர்கள், மனோரா கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றினர்.
தொடர்ந்து, கிராம மக்களைச் சந்தித்து, "நீரில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும், நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுவதால், கடல் வாழ் அரிய உயிரினங்களான கடல் பசு, டால்பின், மீன்கள் ஆகியவை உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது.
எனவே, குப்பைகளை கண்ட கண்ட இடத்தில் கொட்டாமல், உரிய இடத்தில் சேகரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். நீர்நிலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.