தஞ்சாவூர், டிச.22 -
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, ஊமத்தநாடு ஊராட்சி,
பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் இருந்து, பேருந்து வசதி இல்லாததால், பேராவூரணி, பெருமகளூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர்.
அவர்கள் பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் இருந்து
கொரட்டூர் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் புத்தகப்பை சுமந்து வந்து பேருந்து ஏற வேண்டிய நிலை இருந்தது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அதிகாலையில் எழுந்து சிரமப்படும் நிலை இருந்தது.
மேலும், மழைக்காலங்களிலும், மாலை நேரங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 3 கிலோமீட்டர் தூரம், இருபுறமும் வயல்கள், தோப்புகளின் வழியாக தன்னந்தனியாக பாதுகாப்பின்றி, மழைக்கு ஒதுங்க இடமின்றியும், வீட்டிற்கு திரும்ப நடந்து செல்லும் அவல நிலை இருந்தது. இதனால், இப்பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள், கிராம மக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக்கழக தலைவர் உத்தமகுமரன் ஏற்பாட்டில்,
குறிஞ்சி பீப்புள் வெல்ஃபேர் பவுண்டேஷன் இணைந்து பெரியகத்திக்கோட்டை முதல் பேராவூரணி வரை காலை காலை, மாலை என பள்ளி தொடங்கும், நிறைவடையும் நேரங்களில் சென்று வர வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, இதனை இப்பகுதியைச் சார்ந்த 18 மாணவ, மாணவிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெரியகத்திக்கோட்டை கிராமத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக்கழக நிறுவனர் தலைவர் வழக்குரைஞர் உத்தமகுமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் முத்துப்பேட்டை வீரமணி, ஒன்றியச் செயலாளர்கள் மணி (சேதுபாவாசத்திரம்), சாணாகரை சேகர் (பேராவூரணி), அவைத் தலைவர் மகாலிங்கம், காளிமுத்து மற்றும் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி மேகலா, பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முத்து நன்றி கூறினார்.