தஞ்சாவூர், டிச.26 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெருந்தலைவர் காமராசர் அரசு மருத்துவமனையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
தீ தடுப்பு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
இதில், பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் வீ.சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பேசுகையில், "தீ விபத்து ஏற்பட்டால் பதட்டப் படக்கூடாது. நோயாளிகளை பத்திரமாக அவசர வழி வழியாக வெளியேற்ற வேண்டும். தீ விபத்து, மின் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும். எரிவாயு உருளை, அடுப்பு தீப்பற்றினால், நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும். தீத்தடுப்பு சாதனங்களை எவ்வாறு கையாள்வது, இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவது எவ்வாறு" என்பன குறித்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர்.
இதில், அரசு மருத்துவமனையைச் சேர்ந்த பலரும், பொது மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.