உலக மண்வள தினத்தையொட்டி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
பேராவூரணி, டிச 6
பேராவூரணி அருகே பழையநகரம் கிராமத்தில் உலக மண்வள தினத்தையொட்டி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கல்.
பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி விவசாயிகளிடம் பேசுகையில்,
பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைபூண்டு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, மண்ணில் மடக்கி உழும் போது, அவை மண்ணில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு ஹீயூமஸ் எனப்படும் மக்குப்பொருள் மற்றும் இதர அங்ககப் பொருட்களைத் தருகின்றது. இது மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி, மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரித்து, பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றது.
பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதால், மண்ணின் மேற்பரப்பை காற்று மற்றும் நீர் அரிமானத்திலிருந்து பாதுகாப்பதுடன் மண்ணிலிருந்து சத்துக்கள் அடித்துச் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும், மண் இறுக்கமாவது தடைப்பட்டு, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றது. பசுந்தாள் உரங்கள் மணற்பாங்கான நிலங்களில் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. களிமண்பாங்கான நிலங்களில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நல்ல வடிகால் வசதியையும் ஏற்படுத்தி தருகின்றது. களர் மற்றும் உவர் நிலங்களை சீர் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே விவசாயிகள் அனைவரும் உலக மண்வள தினத்தில் இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பெருமளவில் நிலத்தில் இட்டு மண் வளத்தை காப்போம் என்று பேசி, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கினார்.
இதேபோல் சேதுபாவாசத்திரம் வட்டாரம் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சி கங்காதரபுரம்;, கோட்டைக்காடு கிராமங்களில் உலக மண் வள தினம் நடைபெற்றதில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொகுதி உதவி வேளாண்மை அலுவலர், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.