தஞ்சாவூர், டிச.7 -
கருணை அடிப்படையில் வருவாய் கிராம ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் டி பிரிவில் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வருவாய் கிராம ஊழியர்களுக்கு எரிபொருள் படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், முதலமைச்சரின் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத் தலைவர் கமலஹாசன், செயலாளர் சத்யா, பொருளாளர் அம்பிகா, மாவட்ட துணை தலைவர் விஜயகுமார் மற்றும் 18 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.