தஞ்சாவூர், ஜன.4 -
அரசாணை எண்-243 ஐ திரும்பப் பெற்று, பழைய நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பதவி உயர்வை பழைய நடைமுறையிலேயே செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை சரி செய்து, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேதுபாவாசத்திரம் வட்டாரக்கிளை சார்பில், குருவிக்கரம்பையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் மு. மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஏ.வி.சந்திரசேகர் வரவேற்றார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுப. குழந்தைசாமி பேசினார். நிறைவாக வட்டாரப் பொருளாளர் க.திருஞானவேல் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொ.சிங்காரவேலு, அ.சத்தியமூர்த்தி, ம.பரமசிவம், செந்தாமரை, நிர்வாகிகள் கலைச்செல்வி, சண்முகவள்ளி, வட்டார துணைச் செயலாளர் ஏ.கே.நீலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.