தஞ்சாவூர், மார்ச்.26 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில், 100 விழுக்காடு வாக்களிப்போம். நேர்மையாக வாக்களிப்போம். அனைவரும் வாக்களிப்போம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரா.ராஜா தலைமை வகித்தார். பேராவூரணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான தெய்வானை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி பேரூராட்சி அலுவலகம், முதன்மைச் சாலை, பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அன்பரசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர், பேரணியில் கலந்து கொண்டும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக நூறு விழுக்காடு வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பேரூராட்சி வளாகத்தில் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டிருந்தது.