தஞ்சாவூர், மார்ச்.28 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தெய்வானை பேரணியை துவக்கி வைத்து, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 விழுக்காடு வாக்களிப்பதன் இலக்கு குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி சேதுசாலை, அரசு மருத்துவமனை சாலை, தேவதாஸ் சாலை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
இதில், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் முனைவர் ராணி, பேராசிரியர்கள் பபிதா, மோகனசுந்தரம், சமூக ஆர்வலர் நா.வெங்கடேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.