தஞ்சாவூர், மார்ச்.18 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித்துணை ஆட்சியருமான பூஷணகுமார் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், " நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோத பண பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும். இது தொடர்பாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைகேடுகள், புகார்கள் ஏதும் இருப்பின் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை எண் 04373-232456 க்கு தொடர்பு கொள்ளலாம். பத்திரிகைகளில் வைத்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வது, பத்திரிக்கைகளில் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வது குறித்து முறையாக கணக்கு இருக்க வேண்டும்.
அது குறித்து கண்காணிக்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால், பணம் பறிமுதல் செய்யப்படும். நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
வட்டாட்சியர் தெய்வானை, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.