தஞ்சாவூர், மார்ச்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ விநாயகா திருமண மஹாலில், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்தும், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. கண் பரிசோதனை முகாமிற்கு பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் கே.சிவநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி.ராஜா வரவேற்றார். முகாமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் இ.வீ.சந்திரமோகன், நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், லயன்ஸ் மாவட்ட அவை கூடுதல் செயலாளர் எஸ்.கே. ராமமூர்த்தி, மாவட்ட அவை இணைப்பொருளாளர் எம்.கனகராஜ், வட்டாரத் தலைவர் கே.குட்டியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக லயன்ஸ் சங்கப் பொருளாளர் பி.பழனியப்பன் நன்றி கூறினார். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் குழு கண் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இதில், 485 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், 176 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.