தஞ்சாவூர், ஏப்.4 - தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சிற்றம்பலம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடந்த மார்ச்.28 அன்று இரண்டு கடைகளை சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் புகையிலைப் பொருட்களைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து, உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சித்ரா உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை பேராவூரணி உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர்,காவல்துறையினர் திருச்சிற்றம்பலம், செருவாவிடுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கும் அபராதம் விதித்து தற்காலிகமாக மூடி, சீல் வைத்தனர். இந்த இரண்டு கடைகளையும், 14 நாட்களுக்கு திறக்க உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளனர். இதுகுறித்து, உணவுப் பாதுகாப்பு துறையினர் கூறுகையில், "தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.