பேராவூரணி நகரம் முழுவதும், சாலை ஓரங்களில் இருந்த நிழல் தரும் மரங்கள், சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பேராவூரணி நகர் முழுவதும் உள்ள சாலை ஓரங்களில் எவ்வித மரங்களும் இல்லாமல், பொதுமக்கள் வெயிலுக்கு ஒதுங்க கூட இடமின்றி அள்ளாடும் மிகக் கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு இருக்கிற சுட்டெரிக்கும் வெயிலின் வேகத்தை மக்களால் தாங்கிட முடியாத வகையில், பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பேராவூரணி கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார், பேராவூரணி நகர் முழுவதும் சாலை ஓரங்களில் பசுமை மரங்களை நட்டு பராமரித்து வருங்கால தலைமுறைக்கு பசுமையான நகரை உருவாக்கிட வழி வகுக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதுகுறித்து சமூக ஆர்வலர் சிவ.சதீஷ்குமார் கூறுகையில் "நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் அதை உணர்ந்து, சாலையின் இருபுறமும் தகுந்த இடைவெளி விட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க, ஏற்பாடுகளை செய்வோம் என உறுதி அளித்துள்ளனர்" என்றார். கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் மற்றும் சமூக ஆர்வலர் சிவ.சதீஷ்குமார் ஆகியோரின் இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்