தஞ்சாவூர், மே.12 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகளின் தரம் குறித்து, நெடுஞ்சாலைத்துறையின் உள்தணிக்கைக்காக அமைக்கப்பட்ட பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், பாலப்பணிகளின் தரம் குறித்தும் அளவீடுகள் குறித்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டிற்கான உள்தணிக்கை ஆய்வுகள் மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநரின் உத்தரவின்படி, கண்காணிப்புப் பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப்பணிகளை, திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கோட்டப்பொறியாளர் கண்ணன், உதவிக்கோட்டப் பொறியாளர் ஜெயராமன் மற்றும் உதவிப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய பொறியாளர் குழு ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்து வருகிறது. இந்த ஆய்வின்போது, தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கோட்டத்தின் மூலம் பட்டுக்கோட்டை - பேராவூரணி -அறந்தாங்கி சாலை கி.மீ. 16/10 மற்றும் 21/8 ஆகிய இடங்களில் பூனைக்குத்தி மற்றும் அம்புலி ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலப் பணிகளையும், முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி - சேதுபாவாசத்திரம் சாலை கி.மீ.147/6ல் பூனைக்குத்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலப் பணிகளையும் உள்தணிக்கைக்குழு தள ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்தது. இதில் பாலத்தின் நீளம், அகலம் மற்றும் அகலம் உள்ளிட்ட பாலத்தின் அளவீடுகளை அளந்தும், கட்டுமானத்தின் தரத்தினை உறுதிப்படுத்த நவீன கருவிகள் மூலம் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது தஞ்சாவூர் நெடுஞ்சாலைத் திட்டங்கள் உதவிக்கோட்டப் பொறியாளர்கள் சத்தியன், கீதப்பிரியா, உதவிப்பொறியாளர்கள் சுதாகர், அன்சாரிராஜா மற்றும் இளநிலைப்பொறியாளர் பாலச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.