தஞ்சாவூர், ஜூன்.28 -
தஞ்சை மாவட்டம்,
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கத் தவறிய உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அதே பகுதியில், உயர்திறன் கொண்ட மின்மாற்றியை அமைக்காமல் காலம் கடத்தும் மின்சாரத் துறையை கண்டித்தும், ருத்திரசிந்தாமணி ஊராட்சி சீகன்காடு கிராமத்தில் ராமையன் என்ற விவசாயிக்கு ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு வேண்டி தட்கல் முறையில் பணம் செலுத்தி 6 ஆண்டுகள் கடந்த நிலையில் மின் இணைப்பு வழங்காத மின்வாரியத்தை கண்டித்தும், உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில், ரெட்டைவயல் கடைவீதியில் ஜூலை 2 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெய்வானை தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சரக வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோ, மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் அரசு தரப்பிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்
ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பெரியண்ணன், சகாபுதீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், மேலமணக்காடு கிராமத்தில் உயர்திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இனிமேல் விவசாயிகளின் வயல்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது எனவும், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும், வரும் ஜூலை.10 க்குள் விவசாயி ராமையனுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்" எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதை ஏற்று ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.