தஞ்சாவூர், மே.31 -
ஒவ்வொரு ஆண்டும் மே.31 உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை நுகர்வை குறைப்பதற்கான வகையிலும், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை ஊக்குவிக்கும் வகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், திருச்சிற்றம்பலம் கடைத் தெருவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.அருள், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், செல்வேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். புகையிலை ஒழிப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த பேரணியில் சுகாதார ஆய்வாளர்கள் தவமணி, பூவலிங்கம், புண்ணியநாதன், ராஜேந்திரன்,
களப்பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், சீஷா தொண்டு நிறுவனப் பிரதிநிதி மணிவண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி கடைவீதியில் நிறைவடைந்தது.
முன்னதாக, வட்டார மருத்துவ அலுவலர் அருள் கூறுகையில், "அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு 100 மீட்டர் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.