பேராவூரணி தோட்டக்கலைத் துறையில் நடப்பு ஆண்டுக்கான அரசு மானிய திட்டங்கள் பல வந்துள்ளதாக பேராவூரணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வீரிய ஒட்டு ரக விதைகளான வெண்டை, கத்தரி, மிளகாய், வீரிய ஒட்டு ரகங்களான மா, பலா, திசுவாழை போன்ற மரக்கன்றுகள், செண்டி பூ, சம்பங்கி போன்ற மலர் சாகுபடிகள், தேனிப்பெட்டி மண்புழு உரசாகுபடிகூடம், தென்னையில் ஊடு பயிர் சாகுபடி, பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இயற்கை இடுபொருள்கள் மானியத்தில் வழங்கும் திட்டங்கள் ஆகியவை வந்துள்ளன. மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழை, பப்பாளி, கொய்யா, கறிவேப்பிலை அடங்கிய ஊட்டச்சத்து தழை போன்ற திட்டங்கள் வர பெற்றுள்ளன. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், பேராவூரணி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.