தஞ்சாவூர், ஜூலை.26 -
அரசுப் போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காண்ட்ராக்ட் தனியார் மயம் கூடாது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும்.
வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்கள் பேராதரவு தர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், கடை வியாபாரிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க கிளைத் தலைவர் சி.பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் கிளைச் செயலாளர் ஜி.ரகு, மத்திய சங்க துணைச் செயலாளர் என்.நவநீதன், பொருளாளர் சி.முருகானந்தம், துணைச் செயலாளர் கே.ரவி மற்றும் எம்.ரமேஷ், கே.கார்த்தி, பி.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.