தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர், கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு மற்றும் பாடல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ. கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொறுப்பு தலைமை ஆசிரியர் காஜா முகைதீன் வரவேற்றார்.
பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டு பிள்ளைகள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்கிட காமராசர் செய்த கல்விப் பணிகள் குறித்து மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.