தஞ்சாவூர், ஜூலை.26 -
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில், கார்கில் வெற்றி தின விழா வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில், கார்கில் போர் வெற்றி தின விழா நிகழ்ச்சி பேராவூரணி ரயில் நிலையம் அருகில் லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது. லயன்ஸ் சங்கச் செயலாளரும், வர்த்தக சங்க தலைவருமான ஆர்.பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இளையராஜா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த கார்கில் போரில் பங்கேற்ற 6 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் 19 பேருக்கு லயன்ஸ் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து, இனிப்பு, மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், லயன்ஸ் சாசனப் பொருளாளர் எஸ்.கந்தப்பன், வட்டாரத் தலைவர் சிவநாதன், தமிழ்ச்செல்வன், முன்னாள் செயலாளர் ராஜா, முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் நீலகண்ட சேகரன், செயலாளர் பாலதண்டாயுதம், வர்த்தக சங்க செயலாளர் கணேசன் என்ற திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் போரில் மறைந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.