தஞ்சாவூர், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் குருவிக்கரம்பை பெரிய ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அருகே உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள குளங்கள் நிரம்பும். மேலும் 1000 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில், இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் கிளை வாய்க்காலில் தூர்வாரப்பட்ட முட்கள், செடிகள் அகற்றப்படாமல் வாய்க்காலுக்குள்ளேயே கிடந்தது. இதனால் தண்ணீர் செல்ல இயலாமல் வாய்க்கால் உட்பகுதியில், ஆங்காங்கே தொடர்ந்து அடைபட்டிருந்தது. இதனை அகற்றி சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லையென ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் கைவிரித்த நிலையில், முனுமாக்காடு கிராம இளைஞர்களான மருத்துவர் பிரபாகரன் தலைமையில் மதன், பாவேந்தன், இலக்குவணன், சண்முகவேல், வெங்கடேஷ் முத்து சிதம்பரம் ஆகியோர் களத்தில் இறங்கி, தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைபட்டிருந்த முட்செடிகள், குப்பைகளை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். இதையடுத்து, ஏரிக்கு தடையின்றி தண்ணீர் செல்லும் சூழல் உருவானது. இந்நிலையில், தன்னார்வலர்களாக அரசை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்ட இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள், கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.